Sunday, February 14, 2016

ஜீரோ பட்ஜெட் முறையில் நெல் சாகுபடி செய்யும் முறைகள்

ஜீரோ பட்ஜெட் முறையில் நெல் சாகுபடி செய்யும் முறைகள்

“ஒரு ஏக்கர் வயலில் விதைக்க 3 சென்ட் பரப்பில் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். நாற்றங்காலுக்காக தேர்வு செய்த நிலத்தில், இரண்டு சால் உழவு ஓட்டி 20 கிலோ கன ஜீவாமிர்தம் இட்டு மண்ணைச் சமப்படுத்தி... 7 கிலோ பாரம்பர்ய ரக விதைநெல்லைத் தெளிக்க வேண்டும். 7-ம் நாள் 13 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். 11-ம் நாள் 15 லிட்டர் தண்ணீரில் 500 மில்லி ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். 15-ம் நாள் பாசன நீரில் 20 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து பாய்ச்ச வேண்டும். 20-ம் நாள் அரை லிட்டர் புளித்த தயிரை 13 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க  வேண்டும். இப்படிப் பராமரித்தால், நாற்றுகள் நன்கு வளர்ந்து 25-ம் நாளில் நடவுக்குத் தயாராகிவிடும்.

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் இரண்டு சால் உழவு ஓட்ட வேண்டும். பிறகு, 200 கிலோ கனஜீவாமிர்தம் இட்டு, இரண்டு சால் உழவு ஓட்ட வேண்டும். நடவுக்கு முதல் நாள் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை நிலம் முழுக்க பரவலாகத் தெளிக்க வேண்டும். நிலத்தை சகதியாக்கி வரிசைக்கு வரிசை ஒரு அடி, நாற்றுக்கு நாற்று முக்கால் அடி இடைவெளியில், ஒற்றை நாற்று முறையில நடவு செய்ய வேண்டும். 15-ம் நாள் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை பாசன நீரோடு கலந்துவிட வேண்டும். 30-ம் நாள் வடிகட்டிய 10 லிட்டர் ஜீவாமிர்தத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

35-ம் நாள் 6 லிட்டர் அக்னி அஸ்திரத்தை 144 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இது பூச்சிகளைத் தடுத்துவிடும். 75-ம் நாள் தண்டு உருளும் பருவத்தில் 4 லிட்டர் புளித்த தயிரை, 144 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதனால் நெல்மணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, திரட்சியாகவும் இருக்கும். கதிர் பிடித்தவுடன் 144 லிட்டர் தண்ணீரில் 4 லிட்டர் புளித்த தயிர், 50 கிராம் மஞ்சள்தூள் கலந்து தெளிக்க வேண்டும். இதனால் பூஞ்சணத் தாக்குதல் கட்டுப்பட்டு, நெற்பழ நோயும் தடுக்கப்படும்.”




அனைத்து பாரம்பர்ய ரக நெல் விதைகளையும் திருவாரூர் மாவட்டம், ஆதிரங்கம் இயற்கை வேளாண் பண்ணையில் வாங்க முடியும்”

Ref : தஞ்சாவூர் மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி விஜய் மகேஷ்
செல்போன்: 87549-69831.

Friday, February 12, 2016

கால்நடைகளுக்கு ஏற்ற பசுந்தீவன மரங்கள்

Vikatan article

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=115724

கோடைக் காலங்களில் பசுந்தீவனங்கள் கிடைக்காத தருணத்தில் மரத்தழைகள் சிறந்த பசுந்தீவனமாகப் பயன்படுகின்றன. இவை, மற்ற தீவனங்களைக் காட்டிலும் ஊட்டச்சத்து மிகுந்ததாக விளங்குகின்றன. மரத் தழைகளில் பொதுவாக 20 முதல் 40 சதவிகித உலர்பொருள், 10 முதல் 15 சதவிகிதப் புரதச்சத்து மற்றும் 40 முதல் 65 சதவிகித அளவு செரிமானமாகக்கூடிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சவுண்டல் (சூபாபுல்), அகத்தி போன்ற மரத்தழைகள் 30 சதவிகித புரதச்சத்தை அளிக்கக் கூடியவை. இந்தத் தழைகளை தீவனத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்துவதன் மூலம் தீவனச் செலவு கணிசமாகக் குறைகிறது. வன்னி, கருவேலம் மற்றும் கொருக்காப்புளி போன்றவை வறண்ட பகுதிகளிலும் நன்றாக வளரக்கூடியவை. இவற்றின் தழைகள் மற்றும் காய்கள் இப்பகுதிகளில் உள்ள ஆடுகளின் தீவனத் தேவையை நிறைவேற்றுகின்றன.

மரத்தழைகளின் புரதச்சத்து, இரைப்பையில் நுண்ணுயிர்களால் அவ்வளவாகச் சிதைப்படுவதில்லை. அப்படி சிதைக்கப்படாத புரதம் சிறுகுடலில் செரிமானமாக்கப்படுவதால் சிறந்த பயனைக் கொடுக்கிறது. மரங்களின் காய்களிலும் புரதச்சத்து மிகுந்து காணப்படுகின்றது.மரத்தழைகளில் சுண்ணாம்புச் சத்து மற்ற தீவனங்களைக் காட்டிலும் இரண்டில் இருந்து மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. உயிர்ச்சத்து ‘ஏ’ தேவைக்கு மேல் அதிகமாக மரத்தழைகள் மூலம் கிடைக்கின்றது. அகத்தி, முருங்கை, ஆச்சா போன்ற மரங்களின் தழைகள் இரும்புச்சத்தை அதிகம் கொண்டுள்ளன.
மரத்தழைகளில் உள்ள ஊட்டச்சத்து விகிதங்கள் வறட்சியினால் பாதிக்கப்படுவதில்லை. ஆகையால், வறட்சிக் காலங்களிலும் ஊட்டச்சத்து நிறைந்த சிறந்த பசுந்தீவனமாக மரத்தழைகளைப் பயன்படுத்தலாம். நார்ச்சத்தைக் குறைவாகவும், புரதச்சத்தை அதிகமாகவும் கொண்ட சவுண்டல் (சூபாபுல்), அகத்தி போன்ற மரத்தழைகளை வெயிலில் உலரவைத்து, அரைத்து கோழித் தீவனத்தின் ஒரு பகுதியாகச் சேர்ப்பதன் மூலம் தீவனச் செலவு குறைவதோடு, முட்டையின் மஞ்சள் கரு அதிக மஞ்சள் நிறம் கொண்டதாக விளங்குகிறது. கோடைக் காலங்களில் கோழிகளுக்கு, அகத்தி இலைகளை நறுக்கி வழங்குவதன் மூலம், கோடை வெப்பத்தின் பாதிப்பைத் தவிர்க்கலாம்.

கல்யாணமுருங்கை, அகத்தி போன்ற மர இலைகளை முயல்கள் விரும்பி உட்கொள்கின்றன. மர இலைகளில் இயற்கையாகவே நச்சுப் பொருட்கள் உள்ளன. இவற்றைப் போக்க, வெயில் மர இலைகளை சற்று காயவைத்துக் கொடுத்தால், அந்த நச்சுத்தன்மை நீங்கும்.’’