Thursday, August 18, 2016

Ladies finger cultivation . நாட்டு வெண்டைசாகுபடி .

http://www.vikatan.com/pasumaivikatan/2016-jun-10/yield/119500-earning-from-ladies-finger.art

*அனைத்து மண்ணிலும் சாகுபடி செய்யலாம்.
*ஆண்டு முழுவதும் பயிரிடலாம்...

*ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்தால், அதிக விலை.

*நாட்டு வெண்டை 120 நாள் மகசூல் கொடுக்கும்.

*சராசரி 6 ஆயிரம் கிலோ மகசூல்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மழவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்தழகன்.
முத்தழகன்,
செல்போன்: 76395-08971

அரை ஏக்கர் இயற்கை முறை நாட்டுரக வெண்டி சாகுபடி மூலமாக 160 நாள்ல ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல எல்லா செலவும் போக, 75 ஆயிரம் ரூபாய் லாபமாக மிஞ்சுது. 160 நாளுக்கு பிறகும் கூட செடிகள் உயிர்ப்போடு இருக்கு. செடியை கவாத்து பண்ணி, ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல் கொடுத்தோம்னா, அடுத்த
80 நாட்களுக்கு காய்கள் கிடைக்கும்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

அரை ஏக்கர் நிலத்தில் நாட்டு வெண்டையை சாகுபடி செய்யும் விதம் குறித்து முத்தழகன் சொன்ன சாகுபடிப் பாடம் இங்கே...

சாகுபடி நிலத்தை நன்றாக உழவு செய்து மண்ணைப் பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு 3 அடி இடைவெளியில் வரிசை வரிசையாக வாய்க்கால் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு நிலத்தை ஈரப்படுத்தி, வாய்க்கால் உள்கரைகளில் செடிக்குச் செடி ஒன்றரை அடி இடைவெளி இருக்குமாறு ஒரு குச்சியால் ஓர் அங்குல ஆழத்துக்கு குழி பறிக்க வேண்டும். 100 கிராம் ஆட்டு எருவை மண்ணோடு கலந்து குழியில் போட்டு, தலா 2 விதைகள் போட வேண்டும். அரை ஏக்கரில் விதைப்பு செய்ய ஒன்றரை கிலோ நாட்டு வெண்டை தேவைப்படும். 3-ம் நாள் முளைப்புக்கு வரும். 7-ம் நாள் இலைகள் உருவாகும். 10-ம் நாள் பாசனநீரில் 100 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 13-ம் நாள் களை எடுக்க வேண்டும். 20-ம் நாள் பாசனநீரில் 100 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து விட வேண்டும். 25-ம் நாள் வெண்டை வரிசைகளுக்கு இடையே 2 அடி அகலம், முக்கால் அடி ஆழத்துக்கு வாய்க்கால் எடுத்து, அந்த மண்ணைக் கொண்டு வெண்டைச் செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும்.

30-ம் நாள் பூ பூக்கும் தருணத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து, வடிகட்டி, தெளிப்பான் மூலம் செடிகள் மீது தெளிக்க வேண்டும். இதனால், அடுத்த ஒரு வாரத்தில் செடி நன்கு ஊட்டமாக, செழிப்பாக வளரத் தொடங்கும். பூக்களும் அதிகமாக உருவாகும். 20 நாட்களுக்கு ஒரு முறை இதுபோல் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும்.

35-ம் நாள் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். இதனால் இலைப்பேன் தாக்குதல் ஏற்படாமல் கட்டுப்படுத்தலாம். 40-ம் நாள் பாசனநீரில் 100 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து பாய்ச்ச வேண்டும். காய்ப்புழுத் தாக்குதல் வராமல் தடுக்க, 42-ம் நாள் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டுக் கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி கலந்து தெளிக்க வேண்டும். 55-ம் நாள் 100 லிட்டர் ஜீவாமிர்தத்தை, வேப்பிலை மூலம், செடிகள் மீது தெளிக்க வேண்டும். இதனால் சப்பாத்திப் பூச்சிகள் வராமல் முழுமையாக தடுக்க முடியும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதுபோல் ஜீவாமிர்தம் தெளிக்க வேண்டும். வெண்டைச் சாகுபடியில் சப்பாத்திப் பூச்சித் தாக்குதல் என்பது பெரும் சவாலானது. செடிகள் சுணங்கி கிறங்கி விடும். இலைகள் சுருங்கிவிடும். எவ்வளவுதான் ரசாயன பூச்சிக்கொல்லிகள் அடித்தாலும், இதைக் கட்டுப்படுத்தவே முடியாது.

மூலிகைப் பூச்சிவிரட்டி!

தலா 5 கிலோ புங்கன், வேம்பு, ஆடாதொடை, நொச்சி, எருக்கன் இலை மற்றும் 5 லிட்டர் மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். இதன் பிறகு வடிகட்டி, அந்தக் கரைசலோடு, தலா 100 மில்லி புங்கன் மற்றும் வேப்பெண்ணெய், 100 கிராம் காதி சோப்பு கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு  300 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

மிளகாய், இஞ்சி, பூண்டுக் கரைசல்!

ஒரு கிலோ பச்சைமிளகாய், அரை கிலோ இஞ்சி, கால் கிலோ பூண்டு, 100 கிராம் புகையிலை கலந்து மிக்ஸியில் அரைத்து, 4 லிட்டர் தண்ணீர் கலந்து  நன்கு கொதிக்க விட வேண்டும்.

2 லிட்டர் அளவுக்கு கரைசல் சுண்டியதும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தனியாக வேறொரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் 100 கிராம் காதி சோப்பு கலந்து ஊறவைத்து, தலா 50 மில்லி புங்கன், இலுப்பை மற்றும் வேப்பெண்ணெயைக் கலந்து நன்கு கரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, இரண்டு பாத்திரங்களில் உள்ள கரைசல்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி வடிகட்டினால், தெளிந்த கரைசல் கிடைக்கும். இதை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். 10 நாட்களுக்கு ஒரு முறை இதுபோல் கரைசல் தயாரித்து தெளிக்க வேண்டும்

No comments:

Post a Comment