Monday, August 15, 2016

பாசிப்பயறு உளுந்து இயற்கை முறையில மானாவாரி விவசாயம்

http://www.vikatan.com/pasumaivikatan/2016-aug-25/yield/122140-acre90-days129-lakh-profit-from-greengram.art

“மொத்தம் 12 ஏக்கர் நிலம் இருக்குது. கரிசல் கலந்த மணல்பாங்கான நிலம். மானாவாரி விவசாயம்தான் செஞ்சுகிட்டு இருக்கேன். வருஷா வருஷம் சித்திரையில கோடை உழவு போட்டு வெச்சுடுவேன். ஆடிப்பட்டத்துல ரெண்டு ரெண்டு ஏக்கரா பிரிச்சு பாசிப்பயறையும், உளுந்தையும் சாகுபடி செஞ்சிடுவேன். அடுத்து மழையைப் பொறுத்து புரட்டாசி, ஐப்பசி பட்டங்கள்ல கம்பு, கேழ்வரகு, சிவப்புச்சோளம், குதிரைவாலினு பயிர் பண்ணுவேன். வருஷம் தவறாம செம்மறி ஆட்டுக்கிடை போடுறதால அடியுரம் கிடைச்சுடுது. ஊட்டத்துக்கு பஞ்சகவ்யா மட்டும்தான் பயன்படுத்திகிட்டு இருக்கேன். மானாவாரியில இயற்கை முறை விவசாயம்கிறதால பெரும்பாலும் பூச்சிகள், நோய்கள் வர்றதில்லை.  அப்படியே வந்தாலும் பஞ்சகவ்யா தெளிக்கிறதிலேயே அதெல்லாம் கட்டுப்பட்டுடுது. இருந்தாலும், வருமுன் காக்கும்கிறதுக்காக வேப்பெண்ணெய்க் கரைசலை மட்டும் தெளிச்சிடுவேன்.


“போன போக சாகுபடியில் ரெண்டு ஏக்கர் நிலத்துல 806 கிலோ பாசிப்பயறு கிடைச்சது. உளுந்து, ரெண்டு ஏக்கர் நிலத்துல 916 கிலோ கிடைச்சது. பாசிப்பயறுக்கு கிலோ 98 ரூபாய்னு விலை நிர்ணயம் செஞ்சு ஊக்கத்தொகை 15 ரூபாய் சேர்த்து மொத்தம் ஒரு கிலோவுக்கு 113 ரூபாய் கொடுத்து வாங்கிக்கிட்டாங்க. உளுந்து கிலோ 90 ரூபாய்னு விலை நிர்ணயம் செஞ்சு ஊக்கத்தொகை 15 ரூபாய் சேர்த்து மொத்தம் ஒரு கிலோவுக்கு 105 ரூபாய் கொடுத்து வாங்கிக்கிட்டாங்க. அந்த வகையில் 806 கிலோ பாசிப்பயறு மூலமா 91 ஆயிரத்து 78 ரூபாய் வருமானம் கிடைச்சது. அதுல 28 ஆயிரத்து 600 ரூபாய் செலவு போக, 62 ஆயிரத்து 478 ரூபாய் லாபமா நின்னது.  916 கிலோ உளுந்து மூலமா 96 ஆயிரத்து 180 ரூபாய் வருமானம் கிடைச்சது. அதுல 29 ஆயிரத்து 400 ரூபாய் செலவு போக 66 ஆயிரத்து 780 ரூபாய் லாபமா நின்னது. மொத்தமா நாலு ஏக்கர்ல பாசிப்பயறு, உளுந்து மூலமா ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 258 ரூபாய் லாபமா நின்னது” என்றார்.

பாசிப்பயறுக்கு இரண்டு முறை பஞ்சகவ்யா... உளுந்துக்கு மூன்று முறை பஞ்சகவ்யா!

பாசிப்பயறு மற்றும் உளுந்து சாகுபடி செய்யும் முறை குறித்து பெருமாள் சொன்ன விஷயங்கள் இங்கே... 

பாசிப்பயறு!

கோடை உழவு செய்து ஆட்டுக்கிடை போட்டு வைத்த ஒரு ஏக்கர் நிலத்தில், விதைநேர்த்தி செய்த 6 கிலோ பாசிப்பயறு விதையை விதைக்க வேண்டும். விதைத்த 5-ம் நாள் முளைப்பு எடுக்கும். 20 மற்றும் 35-ம் நாட்களில் களை எடுத்து, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து, கை தெளிப்பானால் தெளிக்கவேண்டும். 45-ம் நாளுக்கு மேல் பூ பூக்கத் தொடங்கும். அந்த நேரத்தில், 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி வேப்பெண்ணெய், சிறிது காதிசோப் எனக் கலந்து தெளிக்கவேண்டும். 55-ம் நாளுக்கு மேல் காய்க்கத் தொடங்கி, 65-ம் நாளுக்கு மேல் முற்றி நெற்றாகும். 70-ம் நாளுக்கு மேல் காய்ந்த நெற்றுக்களை மட்டும் அறுவடை செய்யவேண்டும். செடியோடு பிடுங்கக் கூடாது. மீண்டும் 4 நாட்கள் கழித்து, எஞ்சிய நெற்றுக்களை அறுவடை செய்யலாம். 

உளுந்து!

கோடை உழவு செய்து ஆட்டுக்கிடை போட்டு வைத்த ஒரு ஏக்கர் நிலத்தில், விதைநேர்த்தி செய்த 6 கிலோ உளுந்து விதையை விதைக்கவேண்டும். விதைத்த 5-ம் நாள் முளைப்பு எடுக்கும். 20 மற்றும் 35-ம் நாட்களில் களை எடுக்கவேண்டும்.

30, 45 மற்றும் 70-ம் நாட்களில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்கவேண்டும். 50-ம் நாளுக்கு மேல் பூ பூக்கத் தொடங்கும். அந்த நேரத்தில், 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி வேப்பெண்ணெய், சிறிது காதிசோப் எனக் கலந்து தெளிக்கவேண்டும். 60-ம் நாளுக்கு மேல் காய்க்கத் தொடங்கி, 80-ம் நாளுக்கு மேல் முற்றும். 90-ம் நாளுக்கு மேல் உளுந்தை அறுவடை செய்ய வேண்டும். இதை செடியோடு பிடுங்கி நெற்றை தனியாகப் பிரிக்க வேண்டும்.

விதைநேர்த்தி அவசியம்!

“பாசிப்பயறு, உளுந்து இரண்டுக்குமே ஒரு ஏக்கர் நிலத்துக்கு 6 கிலோ விதை தேவைப்படும். விதைநேர்த்தி செய்து விதைக்கும்போது விதையின் முளைப்புத்திறன் அதிகரிப்பதோடு, வேர்வழி நோய்கள் தடுக்கப்படுகின்றன. தேவைப்படும் பயிருக்கான 6 கிலோ விதையை ஒலைப்பெட்டி அல்லது மண்பானையில் போட்டு 30 கிராம் சூடோமோனஸைத் தூவி... அனைத்து விதைகளிலும் சூடோமோனஸ் படும்படி பெட்டியை நன்கு குலுக்க வேண்டும். பிறகு ஒரு கோணியை(சாக்கு) தரையில் விரித்து அதில் விதைகளைக் கொட்டி ஓர் இரவு உலர்த்த வேண்டும். விதைகளை கடைகளில் வாங்குவதை விட நாம் சாகுபடி செய்யும் செடிகளிலிருந்து தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது அடுத்தப் பட்டத்துக்கு நல்லது.

கோடை உழவும் ஆட்டுக்கிடையும்!

ஆடிப்பட்ட மானாவாரி சாகுபடிக்கு கோடை உழவு மிகவும் முக்கியமானது. சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வளர்பிறையில் சட்டிக்கலப்பையால் ஒரு முறை உழவு செய்து ஒரு வாரம் காய விட வேண்டும். பிறகு, 4 நாட்கள் செம்மறி ஆட்டுக்கிடை போட வேண்டும். பிறகு டில்லர் மூலம் இரண்டு முறை உழுது, 20 நாட்கள் நிலத்தை காய விட்டு ஒரு முறை டில்லர் மூலம் உழவு செய்ய வேண்டும். இப்படி கோடை உழவு செய்து வைப்பதால், மண் பொலபொலப்பாக மாறிவிடும். அதனால் மழைநீர் பிடித்து வைக்கப்பட்டு மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்கும். இது பெருமாளின் அனுபவப்பாடம்.

ஆடிப்பட்டம் தேடி விதை!

“ஆடி மாதம்  முதல் மழை பெய்தவுடன்  விதைத்து விடக்கூடாது. முதல் மழையின்போது, பூமியின் வெப்பம் வெளியேறும். அதனால் விதைகள் சரியாக முளைக்காது. இரண்டாவது மழை கிடைத்ததும், டில்லரால்  ஒரு முறை உழவு செய்து விட்டு விதையை நிலத்தில் ஊன்றி விதைக்க வேண்டும். தூவி விதைக்கக் கூடாது. தூவி விதைத்தால், இடைவெளி சீராக இருக்காது” என்கிறார், பெருமாள்.

No comments:

Post a Comment