Friday, February 12, 2016

கால்நடைகளுக்கு ஏற்ற பசுந்தீவன மரங்கள்

Vikatan article

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=115724

கோடைக் காலங்களில் பசுந்தீவனங்கள் கிடைக்காத தருணத்தில் மரத்தழைகள் சிறந்த பசுந்தீவனமாகப் பயன்படுகின்றன. இவை, மற்ற தீவனங்களைக் காட்டிலும் ஊட்டச்சத்து மிகுந்ததாக விளங்குகின்றன. மரத் தழைகளில் பொதுவாக 20 முதல் 40 சதவிகித உலர்பொருள், 10 முதல் 15 சதவிகிதப் புரதச்சத்து மற்றும் 40 முதல் 65 சதவிகித அளவு செரிமானமாகக்கூடிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சவுண்டல் (சூபாபுல்), அகத்தி போன்ற மரத்தழைகள் 30 சதவிகித புரதச்சத்தை அளிக்கக் கூடியவை. இந்தத் தழைகளை தீவனத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்துவதன் மூலம் தீவனச் செலவு கணிசமாகக் குறைகிறது. வன்னி, கருவேலம் மற்றும் கொருக்காப்புளி போன்றவை வறண்ட பகுதிகளிலும் நன்றாக வளரக்கூடியவை. இவற்றின் தழைகள் மற்றும் காய்கள் இப்பகுதிகளில் உள்ள ஆடுகளின் தீவனத் தேவையை நிறைவேற்றுகின்றன.

மரத்தழைகளின் புரதச்சத்து, இரைப்பையில் நுண்ணுயிர்களால் அவ்வளவாகச் சிதைப்படுவதில்லை. அப்படி சிதைக்கப்படாத புரதம் சிறுகுடலில் செரிமானமாக்கப்படுவதால் சிறந்த பயனைக் கொடுக்கிறது. மரங்களின் காய்களிலும் புரதச்சத்து மிகுந்து காணப்படுகின்றது.மரத்தழைகளில் சுண்ணாம்புச் சத்து மற்ற தீவனங்களைக் காட்டிலும் இரண்டில் இருந்து மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. உயிர்ச்சத்து ‘ஏ’ தேவைக்கு மேல் அதிகமாக மரத்தழைகள் மூலம் கிடைக்கின்றது. அகத்தி, முருங்கை, ஆச்சா போன்ற மரங்களின் தழைகள் இரும்புச்சத்தை அதிகம் கொண்டுள்ளன.
மரத்தழைகளில் உள்ள ஊட்டச்சத்து விகிதங்கள் வறட்சியினால் பாதிக்கப்படுவதில்லை. ஆகையால், வறட்சிக் காலங்களிலும் ஊட்டச்சத்து நிறைந்த சிறந்த பசுந்தீவனமாக மரத்தழைகளைப் பயன்படுத்தலாம். நார்ச்சத்தைக் குறைவாகவும், புரதச்சத்தை அதிகமாகவும் கொண்ட சவுண்டல் (சூபாபுல்), அகத்தி போன்ற மரத்தழைகளை வெயிலில் உலரவைத்து, அரைத்து கோழித் தீவனத்தின் ஒரு பகுதியாகச் சேர்ப்பதன் மூலம் தீவனச் செலவு குறைவதோடு, முட்டையின் மஞ்சள் கரு அதிக மஞ்சள் நிறம் கொண்டதாக விளங்குகிறது. கோடைக் காலங்களில் கோழிகளுக்கு, அகத்தி இலைகளை நறுக்கி வழங்குவதன் மூலம், கோடை வெப்பத்தின் பாதிப்பைத் தவிர்க்கலாம்.

கல்யாணமுருங்கை, அகத்தி போன்ற மர இலைகளை முயல்கள் விரும்பி உட்கொள்கின்றன. மர இலைகளில் இயற்கையாகவே நச்சுப் பொருட்கள் உள்ளன. இவற்றைப் போக்க, வெயில் மர இலைகளை சற்று காயவைத்துக் கொடுத்தால், அந்த நச்சுத்தன்மை நீங்கும்.’’

No comments:

Post a Comment