Tuesday, July 18, 2017

Bio NPK Prepration.

தொடர்புக்கு,
முனைவர் உதயகுமார் செல்போன்: 95977 82155 


இந்தத் திரவத்தை இலை தழைக்கழிவுகள், ரோடோ சூடோமோனஸ்’ (Rodo Seudomonos) எனும் பாக்டீரியா மற்றும் ஏ.எல்.ஏ (5 அமினோ லியோலிக் அமிலம் (5 Amino Levulinic Acid) ஆகியவற்றைக் கொண்டு நாமே தயாரித்துக் கொள்ளலாம். வயலில் தேவையில்லாத களைகளை (பார்த்தீனியம் செடி உள்பட) நொதிக்க வைத்து இந்தத் திரவத்தைத் தயாரிக்க வேண்டும். இதனால், களைச்செடிகளைப் பயனுள்ளதாக மாற்ற முடியும்.

ரோடோ சூடோமோனஸ் என்பது   ஒளிச்சேர்க்கை (போட்டோ சிந்தடிக்) செய்யக்கூடிய பாக்டீரியா. இந்தப் பாக்டீரியா தாவரங்களைவிட 300 மடங்கு அதிகமாகச் சூரிய ஒளியைப் பயன்படுத்தக்கூடியது. அதன் மூலமாக, தனக்குத் தேவையான அமினோ அமிலங்கள், என்சைம்கள், ஹார்மோன்களை அது உற்பத்தி செய்துகொள்ளும். இந்தப் பாக்டீரியாக்கள் மண்ணில் இருக்கும்போது, ‘லாக்டோ பேசிலஸ்’, ‘ஈஸ்ட்’ போன்றவற்றைச் செயல்படத் தூண்டும். இதனால் மண்ணில் விழும் இலை, தழைகள் விரைவாக மட்கும். சுருக்கமாக ஏ.எல்.ஏ (ALA) என அழைக்கப்படும் 5 அமினோ லியோலிக் அமிலம் எனும் என்சைம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பயன்பாட்டில் உள்ளது. விவசாயத்தில் தற்போதுதான் இதைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
இது தொடர்பான ஆராய்ச்சிக்காக என் வீட்டில் ஒரு மாதிரியை அமைத்திருக்கிறேன். ஓரிரண்டு விவசாயிகள் தோட்டத்திலும் இதை அமைத்திருக்கிறார்கள். நம் சூழலுக்கேற்ப விவசாயிகள் சுலபமாகத் தயாரிக்கும் வகையில் சில மாற்றங்களையும் கண்டறிந்திருக்கிறேன். அவர்களும் இந்தத் திரவத்தைப் பயன்படுத்திய பிறகு பயிர் வளர்ச்சி, மகசூல் நன்றாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதைத் தயாரிப்பது மிகவும் சுலபமானது.

எருக்கு, கொழுஞ்சி, பார்த்தீனியம் உள்ளிட்ட பல வகையான தாவரங்களின் இலைகளை மட்டும் சேகரித்துக்கொள்ள வேண்டும். அவற்றில் 50 கிலோ அளவு இலைகளை ஆயிரம் லிட்டர் தண்ணீரில் நன்றாக மூழ்கும்படி ஐந்து நாள்களுக்கு ஊற வைக்க வேண்டும். அதற்குள் இலைகளில் இருந்து சாறு இறங்கி, தண்ணீர் முழுவதும் கஷாயமாக மாறி இருக்கும். இந்தக் கஷாயத்தை வடிகட்டி வேறொரு டிரம்மில் ஊற்றி, அதில் 10 கிலோ பிண்ணாக்கு (கடலைப் பிண்ணாக்கு அல்லது எள்ளுப் பிண்ணாக்கு) சேர்த்துக் கலக்க வேண்டும். பிறகு, மீன்தொட்டிகளில் பயன்படுத்தப்படும் காற்று செலுத்தும் மோட்டார் மூலம் இத்திரவத்துக்குள் காற்றைச் செலுத்த வேண்டும்.
இலைகளை ஊற வைத்த 5-ம் நாள் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்மில் 42 கிராம் ரோடோ சூடோமோனஸ், 40 கிராம் ஏ.எல்.ஏ என்சைம், 40 கிராம் உப்பு ஆகியவற்றைக் கலக்க வேண்டும். பிறகு, டிரம் நிறையும் வரை தண்ணீர் நிரப்பி வெயிலில் ஒரு நாள் வைத்தால், இது சிவப்பு நிறத்துக்கு மாறிவிடும்.

கஷாயத்தில் பிண்ணாக்கு கலந்து காற்று செலுத்திய பிறகு, 20 லிட்டர் டிரம்மில் தயாரித்த திரவத்தை அதனுடன் கலக்கி 25 நாள்கள் வைத்திருந்தால் பயோ என்.பி.கே தயாராகிவிடும். முதல் முறை மட்டுமே 25 நாள்களாகும். அடுத்த முறை தயாரிக்கும்போது ஏற்கெனவே தயாரித்த கசடுகள் டிரம் அடியில் இருப்பதால் ஏழே நாட்களில் தயாராகிவிடும். பயோ என்.பி.கே திரவத்தை அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

ஆயிரம் லிட்டர் திரவத்தைப் பத்து ஏக்கர் நிலத்தில் உள்ள பயிர்கள் மீது தெளிக்கலாம். சொட்டுநீர்ப் பாசனம் மூலமாகக் கொடுப்பதாக இருந்தால், ஐந்து ஏக்கருக்குப் போதுமானதாக இருக்கும். இதைப் பயிருக்குக் கொடுக்கும்போது பயிர் வளர்ச்சி நன்றாக இருக்கும். அதிகப் பூக்கள் எடுக்கும்; மகசூல் மூன்று மடங்கு அதிகரிக்கும். காய், பழங்கள் சுவையாகவும், நீண்டநாள்கள் சேமித்து வைக்கும் திறனுடையதாகவும் இருக்கும்.

இதைத் தயாரிக்க, டிரம்கள், மோட்டார், குழாய்கள் உள்ளிட்டவை வாங்க 50 ஆயிரம் ரூபாய் வரை தேவைப்படும்.